Sunday, June 30, 2024

ஸ்ரீமத் பாகவதம் - 364

 ஸ்ரீமத் பாகவதம் - 364
கண்ணன் மண்ணை உண்ட லீலையைக் கேட்டதும் பரீக்ஷித் உள்ளம் கசிந்தான்.

மஹரிஷீ!

அவனது உள்ளத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீசுகர் வாஞ்சையுடன் பார்த்தார்.

யசோதைக்கு ஒரு கணம் ஞானம் வந்துவிட்டது. அதை பகவான் மாயையினால்‌ மறைத்துவிட்டானே.

ஆம் பரிக்ஷித்.

இத்தகைய பெருமை மிக்க லீலைகள் அவனைச் சுமந்து பெற்ற பெற்றோர்க்குக் காணக் கிடைக்கவில்லையே. நீங்கள் சொல்லிக் கேட்டாலும் கண்முன்னே நடப்பதுபோல் ஆனந்தம் மிகுகின்றதே. நேரில் கண்ட யசோதைக்கு எப்படி இருந்திருக்கும்? கண்ணன் அவளிடம் தாய்ப்பால் குடிக்கிறானே. யாருக்காவது கிடைக்குமா? பெற்றவளுக்கே கிட்டவில்லை. யசோதை அப்படி என்னதான் புண்ணியம் செய்தாள்? பகவானின் இத்தகைய பால லீலைகளைக் காண நந்தன் என்ன புண்ணியம் செய்தார்?
என்றான்.

ஸ்ரீ சுகர் அரசனின் கேள்வியைப் பாராட்டும் விதமாகத் தலையாட்டினார். பின்னர் கூறத் துவங்கினார்.

அஷ்டவசுக்களில் மிகச் சிறந்தவரான த்ரோணர் என்பவர். அவர் மனைவி தரை என்பவள். அவர்கள் இருவரையும் பூமியில் (கோஸம்ரக்ஷணம்) பசுக்களைப் பராமரிக்கும்படி ப்ரும்மதேவர் கட்டளையிட்டார்.




அப்போது த்ரோணர்,
புவி வாழ்வு மிகவும் துன்பமயமானது. அதைக் கடக்க வேண்டுமெனில் ஸ்ரீ ஹரியிடம் மிகச் சிறந்த பக்தி உண்டாகவேண்டும். அத்தகைய பக்தியை எங்களுக்கு அருளுங்கள். அப்போதுதான் நாங்கள் நிம்மதியாக புவியில் பசுக்களைப் பராமரிக்க இயலும். என்றார்.

ப்ரும்மாவும் அவ்வாறே ஆகட்டும் என்று வரமளித்தார்.

அதன் பயனாக த்ரோணர் நந்தனாகவும், தரை யசோதையாகவும் பிறந்தனர். கோப கோபியர்களும் அவர்களின் பரிவாரமாகப் பிறந்தனர்.‌ப்ரும்மாவிடம் பெற்ற வரத்தின் பயனாக அவர்களுக்கு பகவானிடம் நிலையான பக்தி சித்தித்தது. நிலையான பக்தியின் பயனாக இறைவன் அவர்கள் வீட்டில் எழுந்தருளி லீலைகள் செய்தான். என்றார்.

கணத்துக்கொரு லீலையும் பொழுதுக்கொரு புகாருமாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

பல நேரங்களில் புகார்களால் யசோதை மிகவும் சலிப்படைவாள். ஆனால், யார் என்ன சொன்னாலும், கண்ணன் வெண்ணெய் திருடினான் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டாள். எவ்வளவு சொன்னாலும் யசோதை கேட்பதில்லை என்று அறிந்தாலும் கோபிகள் தினமும் யசோதை வீட்டிற்குப் புலம்புவதற்காக என்றே செல்வார்கள்.

அப்படிச் சொல்லும்போது கண்ணன் யசோதையின் பின்னால் ஒளிந்து நின்று சொல்லாதே என்று கண்களால் கெஞ்சுவான். அல்லது மிராட்டுவான். அந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே தினமும் வருவார்கள்.

கண்ணன் எவ்வளவு அமர்க்களம் செய்தாலும் கோபிகளால் ஒரு நாள்கூட கண்ணனைப் பார்க்காமல் இருக்கமுடியாது.

இப்போது இன்னும் சற்று வளர்ந்துவிட்ட கண்ணனுக்கு ஏராளமான நண்பர்கள் சேர்ந்துவிட்டனர்.

வெண்ணெய் திருடப் போனாலும் சரி, விளையாடப் போனாலும் சரி, எப்போதும் எல்லாரையும் அழைத்துக்கொண்டுதான் போவான்.
எடுக்கும் வெண்ணெய்யை அனைவர்க்கும் கொடுப்பான்.

இவர்கள் கூட்டத்தில் ஒரு குரங்கும் உண்டு. வேறு யார்? சிறிய திருவடிதான். ராமாவதாரத்தில் தன்னலமற்ற சேவையின் ருசியை அனுபவித்தவராயிற்றே. இப்போது இறைவன் புவியில் பிறந்திருக்கும் சமயம் வாய்ப்பை விடுவாரா?

கண்ணனுடனேயே எப்போதும் இருப்பார். சில நேரங்களில் வெண்ணெய்க் களவிற்கு துப்பு கொடுப்பார். கண்ணன் எங்கு சென்றாலும் உடன் செல்வார்.

வெண்ணெய்யை நன்றாக நக்கிவிட்டு, கையலம்பும் பழக்கமெல்லாம் கண்ணனுக்குக் கிடையாது. அந்தக் கையை உடன் வரும் குரங்கின்மீது நன்றாகத் தடவுவான். இவரும் சுகமாகக் காட்டுவார்.

அவ்வாறு கண்ணன் தடவிவிட்ட பழக்கத்தாலேயே இன்றும் நாம் ஹனுமாருக்கு வெண்ணெய்க்காப்பு சாற்றுகிறோம். வெண்ணெய்யைத் தடவி க்ருஷ்ணாவதாரத்தை நினைவு படுத்தினால் அவருக்கு கண்ணன் அடித்த லூட்டிகளை நினைவிற்கு வந்து மனம் குளிவார். அவ்வமயம் நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றவும் செய்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம் - 363

 ஸ்ரீமத் பாகவதம் - 363
சிறிது நேரம் குழந்தைகள் விளையாடுவதை ரசித்த யசோதை உள்ளே சென்றாள்.

கன்றின் வாலைப் பிடித்து ஓடிக் கொண்டிருந்த குழந்தைகள் அப்படியே மண்ணில் அமர்ந்துகொண்டனர்.

சுற்றி சுற்றி வந்த கன்று கண்ணனின் அருகில் அமர்ந்தது. கண்ணன் மெதுவாக மண்ணை எடுத்து வாயில் வைத்தான்.

பார்ததுக் கொண்டே இருந்த பலராமன், கண்ணன் கையைத் தட்டிவிட்டான். மீண்டும் பலராமன் அசருவதற்குள் கண்ணன் நன்றாக நைசாக இருந்த மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். கண்ணனின் கரம் பட்டதால் அந்த மண் பகவானுக்கே மிகவும் சுவைத்தது.

தன்னாலேயே உலகில் அனைத்தும் இனிமையாகிறது என்று அறியாத குழந்தையான கண்ணன் இன்னொரு வாய் மண்ணை அள்ளி வாயில் போட, அவனைத் தடுக்க முடியாமல், செய்வதறியாமல் திகைத்தான் பலராமன்.

பிறகு, அம்மா அம்மா என்று கூவிக்கொண்டு யசோதையைத் தேடி ஓடினான். அவனோடு மற்ற சிறுவர்களும் ஓடினர்.

கண்ணனைத் தவிர அத்தனை குழந்தைகளும் ஓடிவருவதைக் கண்ட யசோதை பயந்துபோனாள். ஏதோ அசுரன் வந்துவிட்டானோ என்று எண்ணினாள்.

என்னாச்சு என்று பதறினாள்.

அம்மா அம்மா
கண்ணன் மண்ணைத் திங்கறான்.
கண்ணன் மண்ணைத் திங்கறான்.

என்ன?
என்னடா சொல்றீங்க?



கண்ணன் மண்ணை அள்ளி அள்ளித் திங்கறாம்மா. சொன்னா கேக்கமாட்டேங்கறான். மற்ற குழந்தைகளும் சேர்ந்து மாற்றி மாற்றி முறையிட்டனர்.

நீங்க வந்து பாருங்கம்மா..

பலராமன் யசோதையின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்தான்.

சின்னக் குழந்தையானாலும் இவ்வளவு பலமாக இழுக்கிறானே என்று தோன்றியது யசோதைக்கு. அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்தாள்.

அங்கே கண்ணன் சமத்தாக கன்றுக்குட்டியின் மேல் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவன்தான் சமத்தா இருக்கானே. என்றதும், அம்மா அவன் மண்ணைத் தின்னான். நாங்க பாத்தோம் என்று பலராமன் உறுதியாய்க் கூறினான்.

யசோதைக்குக் கண்ணன் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டிருப்பதைப்‌ பார்த்துச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு அவனை அழைத்தாள்.

இங்க வா கண்ணா.

ஒன்றுமே அறியாதவன்போல் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு என்னம்மா என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தது குழந்தை.

மண் சாப்டியா?

இல்லம்மா..

நீதான் வெண்ணெய் குடுக்கறியே. நான் ஏன் மண்ணை சாப்பிடப்போறேன்.

பலராமனோ
அம்மா அம்மா அவன் மண்ணை சாட்டான்மா. வாயில் பாருங்க என்றான்.

அவனை முறைத்த கண்ணனின் முகத்தைப் பிடித்துத் திருப்பி, மீண்டும் கேட்டாள் யசோதை.

உண்மையைச் சொல்லு கண்ணா. மண்ணு சாப்டியா?

இல்லம்மா.

அண்ணா சொல்றானே.

அவன் பொய் சொல்றாம்மா..

இல்லை இல்லை என்று எல்லாக் குழந்தைகளும் கோரஸாகச் சொல்ல,

சரி நீ ஆ காட்டு..

ஊஹூம்..
உதட்டைப் பிதுக்கினான்.

வாயைத் திறடா..

கண்ணனின் குண்டு கன்னத்தைப் பிடித்து அழுத்த, அவன் செப்பு வாய் திறந்தது.

அங்கே யசோதைக்கு அவன் உண்ட மண் மட்டுமா தெரிந்தது? புவியிலுள்ள எல்லா மண்ணும் தெரிந்தது. இன்னும் நீர், நெருப்பு, ஆகாயம், வளி மண்டலம், நட்சத்திரங்கள், விண்வெளி, பூமண்டலம் முழுவதும் எனக் காட்சி விரிந்துகொண்டே போயிற்று. அப்புவி மண்டலத்துள் இருக்கும், மலைகள், சமுத்திரங்கள், நதிகள், பாரததேசம், கோகுலம், அங்கொரு கண்ணன், யசோதை, கோபிகள், மாடுகள், அந்த யசோதை கண்ணனின் வாயைப் பார்க்க, அதற்குள் மீண்டும் ஒரு பிரபஞ்சம், பூமி, கோகுலம், கண்ணன், யசோதை என்று காட்சிக்குள் காட்சியாகப் போய்க்கொண்டே இருந்தது.

இதென்ன கனவா? புத்தி கலக்கமா? இவன் தெய்வமோ? என்றெண்ணினாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள். அதே காட்சி.

கிறு கிறுவென்று தலை சுற்ற ஆரம்பித்தது யசோதைக்கு.

டக்கென்று வாயை மூடிக்கொண்ட கண்ணன், தாயின் கன்னத்தைப் பிடித்து ஒரு அழகு முத்தம் வைக்க, அனைத்தும் மறந்தாள் அவள். அவளும் கண்ணனை முத்தமிட்டு இடுப்பில் தூக்கிக்கொண்டாள்.

எல்லாம் மறந்துபோனாலும், பனி படர்ந்த இமய மலை மட்டும் மறக்கவில்லை. அதென்னவாயிருக்கும் என்று யோசித்தவள், நேற்று உண்ட வெண்ணெய் ஜீரணம் ஆகவில்லை போலும் என்று எண்ணி கண்ணன் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, லேகியம் கொடுத்தாள்.

ஸ்ரீமத் பாகவதம் - 361

 

 ஸ்ரீமத் பாகவதம் - 361

 
நடக்கத் துவங்கிய கண்ணனை கோபிகளால் சமாளிக்கவே முடியவில்லை. கண்ணனும் அவன் அண்ணனும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைத்தாண்டி அக்கம்பக்க்த்து வீடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். அங்கு சென்று சும்மா இருந்தார்களா? விஷமங்கள் துவங்கின.

கண்ணன் தங்கள் வீட்டிற்கு வரமாட்டானா என்று ஏங்குவதும், வந்தால் அவன் விஷமத்தைத் தாங்கவொண்ணாமல் தவிப்பதும் வாடிக்கையாயிற்று.

யசோதையிடம் சென்று நேரடியாகப் புகார் செய்யத் தயங்கினர். அவள் அரசியாயிற்றே. அவளிடமே சென்று அவள் பிள்ளையைப் பற்றி எப்படிக் கூறுவது என்று பயந்தனர். ஆனால், சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் கண்ணனின் விஷமங்கள் அப்படி.

எனவே, யசோதையின் பார்வை படும் இடத்தில் கூடி நின்றுகொண்டு அவளது காதில் விழுமாறு பேசத்துவங்கினர்.

இன்னிக்கு காலைல கண்ணன் வந்து என்ன செய்தான் தெரியுமா?

என்ன செய்தான்?




நான் உள்ள வேலையா இருந்தேன். அவன் பாட்டுக்கு வந்து எல்லாக் கன்னுக்குட்டியையும் அவிழ்த்துவிட்டுட்டுப் போய்ட்டான்.

அச்சோ.. அப்றம்..

சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள் அடுத்தவள். இவள் பட்ட அவஸதையை மனக் கண்ணால் கண்டுவிட்டாள் போலும்.

என்னடா கண்ணா இப்படி பண்ணின? ன்னு கேட்டா என்ன சொன்னான் தெரியுமா?

என்ன சொன்னான்?

அவிழ்த்துவிடத்தானே வந்திருக்கேங்கறான்.

அப்டின்னா?

எனக்கு மட்டும் புரிஞ்சுதான்ன? இனிமே இப்டி பண்ணாதடான்னு கொஞ்சம் கோவமா சொன்னேனா..

ம்ம்.

கலகலன்னு சிரிச்சுட்டான்.

ஹாஹா.. அப்றம்?

அப்றம்? என்ன கதையா சொல்றேன். அவன் சிரிப்புல எல்லாமே மறந்துபோச்சு. கொஞ்சம் வெண்ணெய் தாங்கோன்னு கேட்டான். ஒரு நினைப்பும் இல்லாம ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்ததும் ஓடிட்டான்.

சர்த்தான்.

நீ எவ்வளவோ பரவால்ல. எங்க வீட்ல நேத்து பானையெல்லாம் உருட்டி உடைச்சுட்டான்.
என்றாள் இன்னொருத்தி.

அடுத்தவள், அவன் சாப்டாலும் பரவால்ல. குரங்குக்கெல்லாம் கொடுக்கறான். வெண்ணெய் நன்னால்லன்னா அது என்னைப் பிடுங்க வரது.

ஹாஹாஹா

இன்னொருத்தி ஆரம்பித்தாள்..

எங்க வீட்ல தேடி தேடிப் பார்த்தான். வெண்ணெயே இல்ல. நான்தான் எல்லாத்தையும் அவர்ட்ட கொடுத்து வித்துட்டு வரதுக்காக மதுராக்கு அனுப்பிட்டேனே.

அப்றம்?

வெண்ணெய் இல்லன்னதும் கோச்சுண்டு தூளில தூங்கிண்டிருந்த குழந்தையைக் கிள்ளி அழவிட்டுட்டுப் போய்ட்டான்.

என்றதும் அத்தனை கோபிகளும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.
யசோதையின் காதில் அனைத்தும் விழுந்தன.

Sunday, June 9, 2024

மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 4

 மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 4



ந்தனு மன்னனும் அவனது மனைவியும் பரஸ்பரம் நன்கு நேசித்து வாழ்ந்து வந்தார்கள். மகாராணி ஒருத்தியிடம் இருக்கவேண்டிய அடக்கமும் மாண்பும் அந்த மாதரசியிடம் மிளிர்ந்து இருந்தது. காலம் எப்படி கடந்து போயிற்று என்பதை அறியாதவர்களாக தம்பதிகள் இன்புற்று வாழ்ந்து வந்தனர். நாளடைவில் அரசி விபரீதமான செயலொன்றேச் செய்ய ஆரம்பித்தாள். அரசனுக்கும் தனக்கும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் தூக்கிச் சென்று கங்கா நதியில் வீசி எறிந்து விட்டு திரும்பி வந்தாள். அரண்மனை திரும்பிய அவள் பெரிய கடமை ஒன்றை நிறைவேற்றி விட்டவள் போல அரசனிடம் புன்னகைத்தாள். அரசி புரிந்து வந்த இந்தப் பாதகச் செயலை பார்த்து சந்தனு மன்னன் திகிலடையலானான். ஆனால் போட்ட நிபந்தனையின்படி அவளை ஒன்றும் கேட்காமல் இருந்தான். இதைப் பற்றி கேட்டால் அது விபரீதமாக போய்விடக் கூடும் என்று அமைதியாக தனக்குள்ளே சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தான். தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை அவள் கொன்று விட்டாள். எட்டாவதாக பிறந்த குழந்தையை அவள் கங்கைக்குள் போடப் போன பொழுது அச்செயலை சகிக்க சந்தனு மன்னனுக்கு இயலவில்லை.


அரசியே நீ ஏன் அரக்கத்தனம் படைத்தவள் போல உன் குழந்தையை கொலை செய்கிறாய்? தயவு செய்து இந்த 8 வது குழந்தையாவது காப்பாற்று என்றான். அதற்கு அரசி மன்னரே நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள். இப்போது உங்களது அன்பு என் மீது இல்லை குழந்தையின் மீது செல்கிறது. ஆகவே நான் செல்கிறேன். நான் செல்வதற்கு முன்பு நான் யார் என்பதையும் நான் ஏன் இந்த செயலை செய்கிறேன் என்பதையும் உங்களுக்கு எடுத்து விளக்குகின்றேன் கேளுங்கள். நான் கங்காதேவி மண்ணுலகில் பிறந்து சிறிது காலம் நான் உங்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பது பிரம்ம தேவன் இட்ட சாபம். தேவதையாக நான் அந்த நிலைமையை அறிகிறேன். நில உலகத்தவராகிய நீங்கள் அதை அறியவில்லை.

விண்ணுலகில் இருக்கும் எட்டு வசுக்கள் வசிஷ்ட மகரிஷி இல்லாத வேளையில் அவருடைய ஆசிரமத்திற்குள் நுழைந்து நந்தினி என்னும் பசுவை திருடிச் சென்று விட்டனர். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த வசிஷ்டர் தனது யோக வலிமையால் குற்றவாளிகள் யார் என்பதை கண்டு கொண்டார் அந்த வசுக்கள் 8 பேரும் உலகத்தில் மானிடராக பிறக்க வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபம் மாற்ற முடியாதது. அந்த எட்டு வசுக்களும் மண்ணுலகில் நான் அவர்களுக்கு தாயாக வேண்டும் என்றும் அதிவிரைவில் இந்த உலக வாழ்க்கையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் என்னிடம் பரிந்து வேண்டிக் கொண்டார்கள் அதன் படியே நான் அவர்களில் 7 பேருக்கு விமோசனம் கொடுத்து விட்டேன். எட்டாம் குழந்தை இந்த உலகில் நீடித்து வாழ்ந்து செயற்கரிய பல செயல்களைச் செய்வான். ஆகையால் அவனை வழி அனுப்ப மாட்டேன். மற்றொரு காரியத்தைச் செய்வேன். அரிதிலும் அரிதாக இருக்கின்ற அஸ்திர சாஸ்திர வித்தைகள் பலவற்றை இவனுக்கு பயிற்றுவித்து உங்களிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லிவிட்டு அந்த குழந்தையை கையில் எடுத்துச் சென்று விட்டாள். இந்த குழந்தை தான் மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் ஆவார்.



Sunday, June 2, 2024

மகாபாரதம் பகுதி - 6 / Mahabharatham,

 

மகாபாரதம் - பகுதி 6

மகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சூழ்நிலைக் கைதியாகி விட்ட தன் நிலையை எண்ணி வருந்தினான். பின்னர் தன் மகனை தேரில் ஏற்றிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான். 

 


 

மன்னன் தன் மகனுடன் வருகிறான் என்ற செய்தி ஊருக்குள் பரவி விட்டதால் முக்கியஸ்தர்களும், நாட்டு மக்களும் ஊர் எல்லையில் வந்து தங்கள் இளவரசரை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன் இளவரசர் தேவவிரதன் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. சந்தனு தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இருவருமாக இணைந்து நல்லாட்சி நடத்தி வந்தனர்.ஒரு சமயம் சந்தனு வேட்டைக்குச் சென்றான். இளைப்பாறுவதற்காக யமுனைக்கரைக்கு வீரர்களுடன் வந்த அவனது நாசியில் சந்தன மணம் பட்டது.

வரவர மணத்தின் அளவு கூடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சந்தன மரங்கள் ஏதும் காணப்படவில்லை. பிறகெப்படி வாசம் வருகிறது? சந்தனு குழம்பினான். கிட்டத்தட்ட ஒரு யோஜனை தூரம் (8கி.மீ.) நடந்தான். நதிக்கரையில் ஒரு பெண் நின்றாள். அவள் பரிசல் ஓட்டுபவள். அவள் நின்ற இடத்தில் இருந்து தான் அந்த மணம் வீசியது. சந்தனு அவளை நெருங்கினான். அவள் உடலில் இருந்து நறுமணம் வீசுவது புரிந்து விட்டது.பெண்ணே! நீ யார்? உன் உடலில் இருந்து சந்தன வாசனை வீசும் மர்மம் என்ன? நீ சந்தனம் பூசியது போலவும் தெரியவில்லையே! என்றான்.

 

ஒரு ஆண்மகன், அதிலும் அரச தோரணையில் இருப்பவன் தன்னிடம் இப்படி கேட்டதும், அப்பெண்ணுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. நாக்குழறியது. வெட்கத்துடன் தலை குனிந்தாள். சந்தனு அவளுக்கு தைரியம் சொன்னான். மாதர் திலகமே! நீ மிகவும் அழகாகவும் இருக்கிறாய். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தயங்காமல் சொல், என்றான்.

அவள் மிகவும் மெதுவாக, பிரபு! என் பெயர் யோஜனகந்தி. நான் இவ்வூர் பரதர் (செம்படவர்) குல தலைவனின் மகள். பிழைப்புக்காக பரிசல் ஓட்டுபவள். தாங்கள் ஆற்றை கடக்க வேண்டுமா பிரபு! நான் அழைத்துச் செல்கிறேன், என்றாள். சந்தனு அவளது அழகை மேலும் மேலும் ரசித்தான். அவளோ நெளிந்தாள். சற்றுநேரம் அவளையே உற்று பார்த்து விட்டு, தன் தேரோட்டியை அழைத்தான். சாரதி! நீ இந்தப் பெண்ணின் தந்தையிடம் என்னை அழைத்துச் செல். இவளைப் பார்த்ததும், முன்பு கங்காதேவியைப் பார்த்தவுடனே ஏற்பட்ட மோகம் போல என் உடல் வருந்துகிறது. 

 

இவளை மணம் முடிக்க மனம் விரும்புகிறது. நாம் அங்கு சென்றதும், நீ பரதர் தலைவனிடம் என் விருப்பத்தைச் சொல். நயமாகப் பேசி சம்மதம் பெற்று விடு, என்றான். சாரதி மன்னனுடன் தேரேறி விரைந்தான். பரதர் குலத்தலைவன் அவர்களை வரவேற்றான்.

மாமன்னரே வர வேண்டும். தாங்கள் இந்த ஏழைகளைச் சந்திக்க வந்தது எங்கள் பாக்கியமே, என்றான். சமயம் பார்த்து சாரதி சொன்னான். பரதர் தலைவனே! பாக்கியம் என்றால் சாதாரண பாக்கியமல்ல! உங்கள் குப்பம் இனி சொர்க்கமாகப் போகிறது. 

காரணம் உன் மகள் யோஜனகந்தியல்லவா இந்த நாட்டின் ராணியாகப் போகிறாள்! என்றான். பரதர் தலைவன் ஆச்சரியமும், குழப்பமும் விஞ்ச விழித்தான். 

பரதர் தலைவா! உன்னை அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. நம் மகாராஜா உன் மகள் யோஜனகந்தியை யமுனைக்கரையிலே பார்த்தார். பார்த்தவுடனேயே அவள் மீது மோகம் கொண்டு விட்டார். இப்போது பெண் கேட்டு வந்திருக்கிறார். மகள் ராணியாகிறாள், நீ இனி பரதர் குல தலைவன் அல்ல! நாடாளும் ராணியின் தந்தை! பொன்னும், பொருளும் உன்னையும், உன்னைச் சார்ந்தோரையும் வந்து குவியப் போகிறது, என்றான். பரதர் தலைவன் இப்போது சிரித்தான்.

யோஜனகந்தியை மாமன்னர் பார்த்தார், மோகம் கொண்டார், பெண்ணும் கேட்கிறார். மடுவிடம் மலை பெண் கேட்கிறது. எங்கள் மடு இன்னும் மலையாகப் போகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்! என் மகளை ஹஸ்தினாபுரத்து அரசருக்கு கொடுப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. 

ஆனால், என் கேள்விக்கு மன்னர் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே மன்னருக்கு தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான். அவன் இளவரசு பட்டம் சூட்டப்பட்டு சந்தனுவிற்கு பிறகு மன்னனாக பொறுப்பேற்க தயாராக இருக்கிறான். அப்படியானால், என் மகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அதன் நிலைமை என்ன? மன்னரே! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை! நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். உமக்குப் பிறகு இந்த தேசத்தை என் மகளுக்கு பிறக்கப்போகிறவன் தான் ஆளவேண்டும். சம்மதமா? என்றான். அவ்வளவு தான்! மன்னனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கே அவன் நிற்கவே இல்லை. 

விடுவிடுவென்று தேரில் ஏறிவிட்டான். தேர் பறந்தது. ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்குள் நுழைந்தது. மன்னன் படுக்கையில் போய் விழுந்தான். யோஜனகந்தியை அவனால் மறக்க முடியவில்லை. அவளது நினைவில் அவன் உடலும் மெலிந்து விட்டது. தந்தையை கொஞ்ச நாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் தேவவிரதன். அவர் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்ததைப் பார்த்தான். வேட்டைக்குச் சென்று வந்த பிறகு தான் இந்த மாற்றம்? 

எதற்கும் சாரதியிடம் விசாரிக்கலாம் என்று அவனை அழைத்தான். சாரதி நடந்ததைச் சொன்னான். அடுத்த கணமே தேவவிரதனின் தேர் செம்படவர் பகுதியை நோக்கி விரைந்தது.

....தொடரும்....


Shrimad Bhagavata Mahatmyam | ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ | அத்தியாயம் 1 | Chapter 1

 ஶ்ரீமத்³பா⁴க³வதமாஹாத்ம்யம் .. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .. க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் . க்ருʼஷ்ணம்ʼ த்³வைபா...